ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் – பாகம் 1,2,3 – கே.பாலமுருகன்

மஞ்ச்சு அரசைக் கவிழ்ப்பதற்காக 1624ஆம் ஆண்டு சீனாவில் ஐவர் கொண்ட குழுவுடன் உருவானதுதான் சீனக் குண்டர் கும்பல் எனப்படும் கொங்சி கெலாப்’. பிறகு, அதில் உறுப்பினர்களாக இருந்த சிலர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பஞ்சம் காரணமாக மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்து வந்தனர்பிரிட்டிஸாரால் ‘The Pirates’ என்று அழைக்கப்பட்ட சீனக் குண்டர் கும்பல், 1799ஆம் ஆண்டு பிரிட்டிஸ்க்கு எதிராகத் தனது முதல் எதிர்ப்பை பினாங்கு மாநிலத்தில் உருவாக்கியது. Ghee Hin(Kantonis), Hai San (Hakka) ஆகிய இரண்டு சீனக் குண்டர் கும்பல்கள் மட்டுமே முதலில் நாட்டில் அறியப்பட்ட கொங்சி கெலாப்ஆகும்.”

  • D. Vaughan 1854. “Notes on the Chinese Of Pinang,” JIA,Jil.8

 

நாவல் நிகழ்ச்சிகள் தொகுப்பு

வருடம் சம்பவங்கள்
1971 ஸ்காப்ரோ மூன்றில் நடந்த கோவில் திருவிழா சண்டை பரப்பரப்பாகப் பேசப்பட்டது
1973 மூசா தோட்டத்தில் நடந்த முதல் திருவிழா சண்டை
1975 மூசா தீமிதி திருவிழாவில் நடந்த இரண்டாவது சண்டை
1975 நொண்டிக் குமார் சரசை அழைத்துக் கொண்டு லெபாய்மேன் கம்பத்திற்கு ஓடிப் போகிறான்.
1978 மூசா, சென்ரோல், பெண்டாங் போன்ற தோட்டங்கள் துண்டாடப்பட்டு இந்தியர்கள் வேலையையும் வீட்டையும் இழந்து பெடோங் புறநகர் பகுதிக்கு ஓடி வருகிறார்கள்.
1980 பெடோங் புறநகர் பகுதியில் மலிவு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.
1981 கிம் செங் தோட்டத்திலிருந்து முத்து அபாங் குழுவைச் சேர்ந்தவர்கள் பெடோங்கிற்கு வந்து சேர்கிறார்கள்.
மார்ச் 10  – 15 1985 பெடோங்கில் பாஞ்சாங் சுரேஷ் குழுவிற்கும் முத்து அபாங் குழுவிற்கும் கலவரம் நடந்தது.
1985 – 1991 வரை பாஞ்சாங் சுரேஷ்க்குப் பதிலாக தியாகுவும், முத்து அபாங்கிற்குப் பதிலாக முனியாண்டியும் குண்டர் கும்பல்களைக் கைப்பற்றுகிறார்கள்.

1

29 ஜூன் 1993, கிள்ளான் சாலையில் இருந்து கொண்டு நாட்டுக்கே அச்சுறுத்தலாக இருந்த ‘பெந்தோங் காளி’ டாமான் சாரா மேடானில் காவல்துறையினரால் சுடப்பட்டான். நாளிதழ்கள் ஆங்காங்கே நடக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை முதல் பக்கத்தில் போட்டுப் பரப்பரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தன.

அதே வாரத்தில்தான் டாமான் சாரா மேடானிலிருந்து 400 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் நாட்டின் ஒதுக்குப்புற அடுக்குமாடி பகுதியான பெடோங்கிற்குச் செல்லும் பெரிய சாலைக்கும் ஆப்பே கடைக்கும் இடைப்பட்ட பகுதியில் சரசு பிணமாகக் கிடந்தாள்.

அவள் மார்பையும் வயிற்றையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்துச் சென்றிருந்தன. தலையின் முன்பகுதியில் கல்லோ கட்டையோ குறுக்காக பட்டு இரத்தம் ஒரு கோடாக ஓடி உறைந்திருந்தது. சரசு அணிந்திருந்த சட்டை வயிற்றுக்கு மேல் ஏறி அவள் உடல் அரை நிர்வாணத்துடன் தெரிய தார் சாலையில் கிடந்தது.

ஈக்கள் மொய்க்கும் சரசின் முகத்தைத் தியாகுவும் மூர்த்தியும் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தனர். அவர்களின் வெறி கண்களில் மின்னியது. ஒரு குரூரமான வேட்டை நாயின் பாய்ச்சல் அவர்களின் முகத்தில் நிழலாடியது.

“இது கண்டிப்பா அந்த ஜாலான் நாலு முனியாண்டி செஞ்சதுதான்,” தியாகு கோபத்துடன் உறுமினான்.

“இல்ல தியாகு. இது மூட்டைங்களோட வேல… சரசு வெளில இருந்த சமயம் பாத்து போட்டுருக்காங்க…நாம ஏமாந்துட்டோம்”

மூர்த்தி வெறுப்பு ததும்ப நடுவில் கிடந்த ஒரு மைலோ டின்னை உதைத்தான்.

“சரசு நமக்கு எவ்ளவோ உதவி செஞ்சிருக்கு…புள்ள குட்டிங்கள பத்தியும் கவலைப்படாம தைரியமா கட்டிய கொண்டு வித்துச்சி… அத இப்படி தந்திரம் பண்ணி கொன்னுட்டாங்க”

தியாகுவிற்குத் தலை சுற்றியது. பெடோங் காற்று அன்று அவனுக்கு விரோதமாக இருந்தது. வாயில் ஊறிய எச்சிலில் கசப்பு கலந்திருந்தது. தலையை இடதுப்பக்கமாகச் சாய்த்து மூர்த்தியைப் பார்த்தான். தியாகு அப்படிப் பார்த்தால் என்னவென்று மூர்த்திக்குத் தெரியும்.

“டேய் மச்சான் வெறிய ஏத்தாத…வேணாம். கட்டி இப்ப கைல இல்ல. கட்டையும் இல்ல. மூட்டக்கிட்டெ நீ தனியாள என்ன கிழிக்க முடியும்?”

பெடோங் அடுக்குமாடி சேகர் அந்தப் பக்கமாக வந்தான். இரண்டு வருடத்திற்கு முன் பி புளோக்கின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தான். அவன் மனைவி அஞ்சலை பி புளோக் கீழ்மாடி கஞ்சா மணியுடன் ஓடிப்போன பிறகு அது நடந்தது. இரவு முழுக்கக் பட்டை  சாராயம் அடித்துவிட்டு வராந்தாவில் படுத்துக் கிடந்தவன், திடீரென காலையில் எகிறி கீழே குதித்து தஜுடின் மாமா மீக்கடை தள்ளு வண்டியின் மீது விழுந்து சிறிய காயத்துடன் தப்பித்தான். ஆனால், அதன் பிறகு பெடோங்கில் ஒரு பைத்தியக்காரனைப் போலத்தான் சுற்றி அலைகிறான். அவனை பெடோங் மறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

“ஏய்ய்ய்…அம்மோய் அம்மோய்…ஹீ ஹீ ஹீ. கீழ விழுந்துட்டியா? உன் பொண்டாட்டி ஓடிப் போயிருச்சா? ஹீ ஹீ ஹீ”

சரசின் உடலிடம் வந்து சிரித்துவிட்டு மீண்டும் வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு ஓடினான் சேகர். சட்டை அணியாத அவன் கருந்தேகம் வெயிலில் மின்னியது. பலநாள் சாப்பிடாத வயிறு அழுத்தமாக ஒட்டிப் போயிருந்தது.

தியாகு சரசின் உடலைப் பார்த்தான். பாதி வெளியேறி வெயிலில் கனன்று கொண்டிருக்கும் அவளின் அரைநிர்வாண உடலைச் சட்டென ஓடிப்போய் மறைக்க வக்கில்லாமல் பெடோங் புறநகர்ப்பகுதி ஒதுங்கி நகர்ந்தோடிப் போய்க்கொண்டிருந்தது. அடுக்குமாடியிலிருந்து இறங்கினால் சட்டென ஒரு பெரிய சாலை, எதிர்ப்புறம் ஒரு பழைய இரண்டுமாடி கட்டிடம். கொஞ்சம் வாகனங்கள். அவ்வளவுத்தான் பெடோங்கின் வளர்ச்சி. ஓர் அழிந்துபோன பெடோங் ஆற்றோரக் கம்பம் எப்பொழுதுமே எல்லோரின் நினைவிலும் ஊறிக்கிடக்கின்றது. பொத்தல் விழுந்த நெற்றியுடன் முகம் வெளிறிப் போய் கிடந்தாள் சரசு. கொஞ்ச நேரத்தில் காவல்துறையினர் வரிசையாக அவ்விடத்தை நோக்கி வரத் துவங்கினர்.

“மச்சான்…வா போய்ருவோம். இனி எவஎவனுக்கு எங்க வைக்கணும்னு அப்புறம் பாத்துகலாம். சரசு நம்ம மனசுல இருக்கும்டா. எத்தனப் பேரு காவக்கொடுத்துருக்கோம். இவ்ளத்தான் உசுரு. வா. ”

மூர்த்தி, தியாகுவைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து பதுங்கினான். தியாகுவும் மூர்த்தியும் காவல்துறையின் பட்டியலில் இருந்ததால் செத்துக்கிடந்த சரசை ஒருமுறை பார்த்துவிட்டு, இரக்கமற்ற கண்களுடன் அங்கிருந்து ஓடினர்.

வெயில் தாளாமல் அவளுடைய வாயிலிருந்து நுரைப் பொங்கி வந்து கொண்டிருந்தது.

2

பெடோங் புறநகர் பகுதி சட்டென 1978இன் இறுதியில் உருவானதுதான். பெடோங்கிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரங்களில் பரவிக் கிடந்த மூன்று தோட்டங்களின் துண்டாடல்களுக்குப் பிறகு காலி நிலமாக இருந்த பெடோங் அங்கிருந்து ஓடி வந்தவர்களின் குடியிருப்பாகிப் போனது. சீனப் பெரும் முதலாளிகள் தோட்டங்களை விலைக்கு வாங்கி சியாமிலிருந்து வேலையாட்களைக் குடியமர்த்திக் கொண்டிருந்தனர். வேலையில்லாமல் எத்தனையோ இந்தியக் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாகப் பற்பல சிறுநகரங்களை நோக்கி புறப்பட்டுக் கொண்டிருந்தனர். சிலர் மட்டும் பெடோங் பகுதிக்கு வந்தனர்.

முதலில் தகரங்களை வைத்துப் பெடோங் ஆற்றோரம் வீட்டைக் கட்டிக் கொண்டவர்களின் எண்ணிக்கைச் சிறுக சிறுக பெருகியது. தண்டல் ராமன் தலைமையில்தான் கிம் செங், சென்றோல், மூசா ஆகிய மூன்று தோட்டங்களிலிருந்தும் வேலையிழந்த தமிழர்கள் கூட்டமாகப் பெடோங் புறநகர் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அரசாங்கத்தின் கைவிடப்பட்ட நிலமாக இருந்த அங்கு ராமன் உதவியுடன் நூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக்கொண்டனர்.

பெடோங் பெரிய சாலையிலிருந்து உள்நோக்கி நுழையும் ஒற்றையடி பாதையில்

மட்டும் ஐந்து தகற வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டப்பட்டிருக்கும். தண்ணீர்த்தொட்டி வீட்டுக்கு வெளியில்தான் இருக்கும். அடுத்து அங்கிருந்து பிரியும் இரண்டு பாதைகளின் ஓரம் மட்டும் மேலும் இருபது வீடுகள் பிய்த்துப் போட்டத்தைப் போல சிதறிக் கிடக்கும். அநேகமாக ஒரு கார் மட்டுமே நுழையும் இடைவெளி மிகுந்த பாதைக்கு இரு பக்கத்திலும் சாலைக்குள் தலையை நீட்ட முயன்று கொண்டிருக்கும் வீடுகள்.

பெரும்பாலான வீடுகள் பெடோங் ஆற்றின் முகப்பைக் கால்வாசி வரை வந்து எக்கிப் பார்க்கும். குறிப்பாகக் கழிப்பறைக்கு ஒரு நீண்ட பலகை பாதையில் நடந்து போக வேண்டும். அதன் நுனியில் ஒரு தகற கூடாரம் இருக்கும். நான்கு பக்கமும் மூடியிருக்கும். அதற்குள் நுழைந்து வட்டமாகப் பொத்தல் இருக்கும் பலகையின் மேல் உட்கார்ந்தால் மலம் கழிக்கலாம். ஆற்று நீர் வற்றிப் போயிருக்கும் சமயத்தில் அப்படிப் பெடோங்கில் மலம் கழிப்பவர்களுக்குப் பெரும் தயக்கம் வந்துவிடும். தூரத்திலிருந்து கவனித்தால் மலம் ஆற்று சேரில் விழுவதைப் பார்க்கலாம். மழைக் காலங்களில் கழிப்பறைக்குச் செல்வதும் ஆபத்துதான். நீர் உடும்பு அந்தப் பலகையிலுள்ள பொத்தல் வழியாக உள்ளே நுழைந்து கொள்ளும். அதனைக் கட்டையெடுத்து அடித்துத் துரத்தியடிப்பதற்குள் பெரும்பாடாகிப் போய்விடும்.

1980ஆம் ஆண்டு வாக்கில் அந்த ஆற்றோர வீடுகள் அழிக்கப்பட்டு எல்லோருக்கும் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன. அதுவும் பெடோங் நிலத்திலேயே ஆற்றுக்குக் கொஞ்சம் தூரத்தில்  சிறிய அடுக்குமாடி குடியிருப்பு ஆடம்பரமில்லாமல் மலிவு வீட்டைப் போல கட்டித் தரப்பட்டது. ஒரே நாளில் எல்லோரும் ஆற்றோர வீட்டைவிட்டு அடுக்குமாடி வீடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அப்பொழுது குவா செம்படாக், பெண்டாங் கிழக்குப் பகுதியில் இருந்த புறநகர் பகுதியிலிருந்தும் நிறைய ஆட்கள் அடுக்குமாடிக்கு வந்தனர். ஏற்கனவே மூசா தோட்டத்தைச் சேர்ந்த ஆட்களுக்கும் பெண்டாங் பகுதியிலிருந்த ஆட்களுக்கும் பயங்கர திருவிழா பகைகள் இருந்தன. ஒரே அடுக்குமாடிக்கு எல்லோரும் வந்து சேர்ந்ததும் நிறைய போத்தல் சண்டைகள் நடக்கத் துவங்கின. அப்பொழுது போத்தல் சண்டை என்றால் பெடோங் அடுக்குமாடியில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது.

‘ப’ வடிவத்தில் மூன்று பெரிய அடுக்குமாடிகளை ‘ஏ’ புளோக், ‘பி’ ப்ளோக், ‘சி’ ப்ளோக் எனப் பிரித்திருந்தனர். ஏ புளோக்கில் ஏற்கனவே பெடோங் ஆற்றோரத்தில் இருந்தவர்கள் பெரும்பகுதியை நிரப்பியிருந்தனர். மூன்றாவது மாடியில் மட்டும் மூசா தோட்டத்திலிருந்து சமீபத்தில் குடிப்பெயர்ந்து வந்தவர்கள் தங்கினர். பி புளோக் குவா செம்படாக் ஆட்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதில் பாதி பேர் சீனர்களாக இருந்தனர். அடுத்ததாக, சீ புளோக்கில் மட்டும் இரண்டு மாடிகளில் பெண்டாங் ஆட்கள் தங்கியிருந்தனர். மேல் மாடி காலியாகவே விடப்பட்டிருந்தது. கீழ் மாடியில் இருந்த பெண்டாங் ஆண்களின் சீட்டாட்டமும், பீர் அடிக்கும் இடமாக மேல்மாடி கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் போனது. அங்கிருந்து கொண்டுத்தான் பெண்டாங் ஆட்கள் ஏ புளோக்கை நோக்கி காலி போத்தல்களை விட்டடிக்கும் பழக்கத்திற்கு ஆளானார்கள். மூசா தோட்ட ஆட்களைத் தொடர்ந்து இம்சைப்படுத்தும் வேலையாக அது நடந்து கொண்டிருந்தது. பிறகு ஏ புளோக்கின் மேல் மாடியில் இருந்த மூசா ஆண்களும் அதே போல போத்தல்களை பி புளோக்கில் உள்ள வீடுகளின் முன் விட்டடிக்க ஆரம்பித்தனர். இதைத்தான் பெடோங்கில் போத்தல் சண்டை என்பார்கள். எந்நேரமும் அந்தப் புளோக்குகளுக்குக் கீழ் கண்ணாடிப் போத்தல்கள் உடைந்து பரவிக் கிடக்கும்.

பிறகு அடுத்த வருடமே இந்த மூன்று புளோக்குக்கும் பின்புறம் மேலும் இரண்டு அடுக்குமாடிகளை அரசாங்கம் கட்டிக் கொடுத்தது. அதைப் புளோக் டி, புளோக் ஈ என்று பெயரிட்டனர். சென்ரோலிலிருந்தும் கிம் செங் தோட்டத்திலிருந்தும் பெரும்பாலான இந்தியர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். வந்தவர்களில் பலர் தோட்டத்திலேயே குண்டர் குழுக்களில் இருந்தவர்கள். முத்து அபாங் என்றால் கிம் செங் தோட்டத்தில் பேர் போனவர் ஆகும்.  சரசும் நொண்டிக் குமாரும் புளோக் ஏ மேல் மாடியில் இருந்தனர். நொண்டிக்குமார் அங்கிருந்து கொண்டு யாரையாவது சபிக்க வேண்டுமென்றால் புளோக்கே பார்க்கும்படி கீழே எச்சில் துப்புவான். அது இரண்டு மாடிகளில் இருக்கும் ஆட்களைத் தாண்டி கீழே விழும். மேல் மாடியில் இருப்பதால் நொண்டிக்குமாருக்கு அது வசதியாக இருந்தது.

“எச்சக்கல…தோ பாரு என் எச்ச…நீங்களாம் அதாண்டா”

வழக்கமாக அந்த ஏ புளோக்கில் நொண்டிக்குமாரின் வாசகம் அதுதான். யாரை அப்படி ஜாடையில் சொல்கிறான் எனக் கண்டுப்பிடிக்கவும் முடியாது.

புளோக்குகளுக்கு வெளியே சுவரில் பெரும்பாலோரின் துணிகள் காய்ந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்கும். சிலர் வீட்டு எதிர்ச்சுவரில் வைத்திருந்த பூச்சாடிகளை நொண்டிக்குமார் வேண்டுமென்றே தள்ளிவிட்டுத் தெரியாத்தைப் போல போய்விடுவான்.

புளோக் ஏவில் மூசா தோட்டத்திலிருந்து வந்து பெடோங் ஆற்றோரக் கம்பத்தில் வாழும் போதே ‘கட்டி’ வியாபாரத்தில் பேர் போன பாஞ்சாங் சுரேஷ் குழுவும் அங்குத்தான் இருந்தன. பாஞ்சாங் சுரேஷ் அங்கு வந்து அவ்வப்போது ஏ புளோக்கில் தங்கியிருப்பான். ஏ புளோக்கிலுள்ள ஒரு வீட்டைப் பாஞ்சாங் சுரேஷ் காலியாகவே வைத்திருந்தான். கீழே தரையில் பழைய தாட்கள் மட்டும் விரிப்பைப் போல போடப்பட்டிருக்கும். மற்ற இடங்களில் எந்தப் பொருளும் வைக்கப்பட்டிருக்காது. ஆங்காங்கே மெழுகுவர்த்திகளும் சில பெட்டிகளையும் பாஞ்சாங் சுரேஷ் வைத்திருப்பான். சுவரின் மூலைகளில் காலியான பீர் போத்தல்களும் இருக்கும். அவன் அறையைத் திறந்தாலே பீர் வாசமும் அழுகிய மீன் வாடையும் எப்பொழுதும் வீசும். அதனாலேயே அவன் பக்கத்து வீட்டில் இருந்த பண்ணீர் ஓடியே போய்விட்டான்.

இரவெல்லாம் நெகிழியை நெருப்பில் உருக்கும் வாசம் வீசிக்கொண்டிருக்கும். பாஞ்சாங் சுரேஷ் ‘பப்பாக்’ என்பதால் அவனை எதிர்த்து யாரும் ஏதும் பேசவே மாட்டார்கள். மூசாவில் இருக்கும்போதே பாஞ்சாங் சுரேஷ் நகரத்தில் குண்டர் குழுவில் சேர்ந்து அங்கிருந்து பயிற்சிப் பெற்றவன் என எல்லோருக்கும் தெரியும்.  அவனுடன் அந்த ஏ புளோக்கில் சில ஆட்களும் உடன் இருந்தனர். ஆனால், அவன் பல நேரங்களில் அங்கு

இருப்பதைவிட சுங்கைப்பட்டாணியில் அடியாட்களுடன் தங்கியிருப்பதுதான் அதிகம். அதே போல முத்து அபாங்கும் சில நாட்கள் மட்டுமே பெடோங்கில் தங்குவான். இரண்டு குழுக்களும் ஒன்றுக்கொன்று பயங்கரப் பகையுடன் பெடோங் அடுக்குமாடியில் இரு திசையில் வளரத் துவங்கின.

அவர்களுக்கு எல்லாருக்கும் வசதியான ஓர் இடமாக ஆப்பே கடை இருந்தது. பெடோங் சாக்கடை பெரும் குப்பைகளால் நிரம்பி வழியும். அதனை அவ்வளவு சகிப்புத்தன்மையுடன் பார்த்தப்படி இருக்கும் ஒரே கடை ஆப்பே கடையாகும்.

 

பெடோங் ஆப்பே கடையின் வரைப்படம்

 

 

3

டேய்ய் ஆப்பே கடையிலத்தான் இந்த வருசம் எல்லாம் பொழப்பும். வெலை வாசி எல்லாம் ஏறிருச்சி.”

மேட்டுவீடு தர்மலிங்கம் மாமா ஆப்பே விற்கும் பட்டை சாராயத்தைத்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தான். விலைக் குறைந்த சாராயம் என்பதால் ஒரு கனச்சதுர வடிவில் நெகிழியில் அடைக்கப்பட்டிருக்கும். அதனைத் தர்மலிங்கம் பல்லால் கடித்துக் கிழித்துவிட்டு அப்படியே வாயைத் திறந்து உள்ளே பீய்த்து அடிப்பான். அது உடனே எரிச்சலை உண்டாக்கிக் கண்களை சிவக்க வைத்து விடும்.

“டேய்ய்ய். சூரு கெளம்பிருச்சினா நான் நானா இருக்க மாட்டென் சொல்லிட்டென்”

தர்மலிங்கம் ஆப்பே கடையில் அமர்ந்துகொண்டு பல்லிழித்தப்ப்டி போவோர் வருவோரிடமெல்லாம் ஏதாவது வம்படித்துக் கொண்டிருந்தான்.

“வாங்கடா…வந்து ஆப்பே கடையிலே ஒரு கா போத்த போடுங்க. வெட்டியா மிதிக்கப் போறிங்க”

1980ஆம் ஆண்டு அடுக்குமாடி வருகைக்குப் பிறகு பெடோங்கிலுள்ள ஆப்பே கடை மீண்டும் புத்துணர்ச்சிப் பெற்றது. ஆப்பே கடையின் மலிவான தேநீரும் காப்பியும் பலருக்கு

ஒத்துப்போயிருந்தன. ஏறக்குறைய மக்கள் மறந்துபோன ஆப்பே கடைக்குப் பட்டை சாராயம் வந்ததும் மீண்டும் அலை மோதினர். ஒரு காப்பியின் விலையும். ஒரு பட்டை சாராயத்தின் விலையும் ஒன்று போல மலிவாகவே இருந்தன.  அவ்வளவு குறைவான விலையில் தேநீரும் பட்டை சாராயமும் ஆப்பே கடையைத் தவிர வேறு எங்கும் கிடைக்காது.

தவுசேங் கிழவன் முதல் அப்புச்சி பாட்டிவரை எல்லோரும் சொந்த வீட்டைப் போல குடும்பக் கதை, வட்டிக்கு விட்டு ஏமாந்த கதை, ஓடிப்போனவர்களின் கதை என எல்லா கதைகளையும் பேசி கோபத்தாபங்களையெல்லாம் இறக்கி வைத்துவிட்டுப் ஒரு பட்டை சாராயத்தையும் வாங்கி அடித்துவிட்டுப் போகும் இடமாக ஆப்பே கடை இருந்தது. ஆப்பே கடையின் முன்பக்கம் வழக்கமாக காப்பி, தேநீர், ரொட்டி பாக்கார் சாப்பிடும் இடமாக இருந்தது. பாஞ்சாங் சுரேஷ், முத்து அபாங் குழுக்களின் மேசை உரையாடல்கள், பட்டை சாராயம், மாஜோங் விளையாட்டு என ஆப்பே கடையின் பின்பக்கம் தனித்துப் பிரசித்திப் பெற்றிருந்தது. ஆப்பே கடைக்குப் பின்பகுதிக்குச் செல்லும் முன் ஒரு தடுப்பு இருக்கும். அதனைத் தாண்டி உள்ளே நுழைந்தால்தான் மறைப்பாக ஐந்து மேசைகள் போடப்பட்டிருக்கும். அந்த இடத்தில்தான் பெரும்பாலான கட்டி உரையாடல்களும் , ‘கேங்’ சந்திப்புகளும் நடக்கும்.

ஆப்பே கடையை ஒரு புகார் பெட்டி என்றும் சொல்லிக் கொள்ளலாம். யாருடைய புகாரையாவது கேட்பதற்காக யாராவது காலையிலிருந்தே அங்கு இருப்பார்கள். அப்படிப் புகார்களைக் கேட்பவர்களுக்குப் பிராய்சித்தமாக ஒரு பட்டை சாராயம் வாங்கிக் கொடுத்தால் போதுமானது.

எப்பொழுது போனாலும் ஏதாவது மனத்தில் உள்ளதை அங்குக் கொட்டிவிட்டு வரலாம். ஒரு காப்பியை ஓர்டர் செய்துவிட்டு பத்து நிமிடங்கள் உட்கார்ந்தால் போதும். மனச்சுமை, தலைச்சுமை எல்லாவற்றையும் யார் தலையிலாவது கொட்டிவிட்டு வரலாம். அதற்கென்ற சம்பளம் வாங்காத தன்னார்வ பெடோங் மனிதர்கள் இருப்பார்கள்.

ஆப்பே கடை பெடோங் பெரிய சாலைக்கு வலதுப் புறமாகப் பிரிந்து செல்லும் ரயில்வே பாதையினோரமிருக்கும் கடைசி கடை. அதில் மொத்தம் ஒன்பது துருப்பிடித்த தகற மேசைகள், பலகைச் சுவரில் எப்பொழுதும் தொங்கிக் கொண்டிருக்கும் கிழிக்கப்பட்ட பழைய நாளிதழ்கள், மேல்மாடிக்குச் செல்லும் இடிந்தும் இடியாமலும் குற்றுயிராய் இருக்கும் படிக்கட்டு, கீழாக இழுத்துப் பணத்தைப் போட்ட பிறகு சரேல் என்று தானாக மேலேறிக் கொள்ளூம் தகறக் குவளை, அதனோரமாக இருக்கும் இருள்டைந்துபோன பலகை தடுப்பு சுவர், அதனைத் தாண்டிப் போனால் பின்பக்க வாசலும் அங்கொரு இரகசியமான ஐந்து மேசைகளும் என ஆப்பே கடை எல்லோருக்குமானதாக பெடோங்கில் நிலைத்திருந்தது. 1960களில் சீன சிறுநகரங்களில் தொடங்கப்பட்ட காப்பிக் கடையின் அமைப்பை ஆப்பே மாற்றாமல் அப்படியே தக்க வைத்திருந்தான்.

லாரிகளின் புகை பட்டே ஆப்பே கடை பழுப்படைந்து போயிருந்தது. அப்பொழுதெல்லாம் லாரிகள் குரூண் மேட்டுமலைக்குப் போக பெடோங்கைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆகவே, அதிகமான லாரி ஓட்டுநர்களும் ஆப்பே கடையில் தஞ்சம் புகுந்துவிட்டுத்தான் போவார்கள். இரண்டு லாரிகள் நிறுத்திவிட்டாலே அந்த இடம் அதற்குமேல் இன்னொரு காரைக்கூட அனுமதிக்காது. இருப்பினும் அப்படியும் இப்படியுமாக லாரிகளை நெருக்கிச் சேர்த்துவிட்டு லாரி ஓட்டுநர்கள் ஆப்பே கடையில் பீர் அடிக்கக் குவிந்து கிடந்த காலமும் இருந்தது. ஆப்பே லாரி ஓட்டுநர்களுக்காவே பீர்களை வாங்கி வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். பெடோங் இளைஞர்கள் அதனை வாங்க மாட்டார்கள். அவர்கள் மத்தியில் பட்டை சாராயமே விலை போனது.

பெடோங்கில் வாழும் தமிழர்கள் சொற்பமானவர்களே. ஆங்காங்கே எனக் கணக்கிட்டாலும் சொல்லும் அளவிற்குத் இராது. 1985 மார்ச் மாதத்தில் ஒரு வாரம் விடாமல் அங்கு நடந்த இரண்டு குண்டர் கும்பலின் தகராறில் ஏறக்குறைய சில ஆண்கள் இறந்துவிட்டார்கள். அவர்களில் காவல்துறை சுட்டது போக மீதி பேர் தோட்டத் திருவிழாவில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டனர்.

 அப்பொழுது ஆப்பே கடையின் ஓரம் மட்டும் மூன்று கொலைகள் நடந்தன. ‘மம்டி சாப்’ முனுசாமி ஒரு சிவப்புக் காரில் வந்து அவனுடைய ஆட்களுடன் அரைமணி நேரம் அங்குக் காத்திருந்தான். ‘மம்டி சாப்’ முனுசாமி என்றாலே பெடோங் நடுங்கும். ஆள் கடத்தலில் பேர் போனவனாவான். பயங்கரக் குடிக்காரனும் கூட; முகத்தின் வலதுபுறத்தில் வண்ணத்துப்பூச்சி பச்சை குத்தியிருப்பான்.

கோலாலம்பூரில் வாழும் பணக்காரர்கள் சிலரின் குழந்தைகளைக் கடத்திக் கொண்டு இங்குத்தான் பலநாள் ஒளித்து வைத்திருந்தான். எப்படியும் முப்பாதாயிரம் பேரம் பேசப்பட்டிருக்கும். அப்படிப் பேச்சு வார்த்தைக்குச் சரி வராத ஒருவரின் எட்டு வயது மகளை இரண்டு துண்டாக வெட்டி புதைத்துவிட்டான் என அவன் மேல் ஒரு பெரிய குற்றச்சாட்டுப் பேசப்பட்டு வந்தன. இந்த முனுசாமி முத்து அபாங்கின் வலது கையைப் போலிருப்பான். முத்து அபாங் அந்தக் குழுவின் ‘பப்பா’ என்றால்  முனுசாமி ‘குட்டி பப்பா’ என்றே சொல்வார்கள்.

முத்து அபாங்கைக் காவல்துறையினர் எத்தனையோமுறை பிடிப்பதற்காக முயன்றிருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் இந்தக் குழுத்தலைவர்களான ‘பப்பாக்’களைக் கைது செய்வது அத்துணை எளிதான காரியம் அல்ல. ஒரு கொங்சி கெலாப்பில் அதிகநாள் பேர் போட வேண்டுமென்றால், தலைவனுக்காகப் பலியை ஏற்று குறைந்தது சில மாதங்களாவது சிறை செல்ல வேண்டும் என்பது குழுக்களில் வழக்கமாக இருந்து வருகிறது. இதனாலேயே முத்து அபாங் போன்றவர்கள் காலம் முழுக்கப் பிடிப்படாமல் குழுவில் புதியதாகச் சேர்பவர்களைப் பலிகடாவாக்கித் தப்பிக்கிறார்கள். அப்படிப் பாஞ்சாங் சுரேஷுக்காகவும் முத்து அபாங்கிற்காகவும் முனுசாமிக்காகவும் சிறைக்குப் போன இளைஞர்கள் எண்ணில் அடங்கா.

அன்று முனுசாமி யாருக்காகக் கொலைவெறியுடன் காத்திருந்தான் எனத் தெரியவில்லை. அடுத்தக் கணமே யாரோ முத்து அபாங்கை சுட்டு ஆற்றில் வீசிவிட்டார்கள் எனும் செய்தி ஆப்பே கடைக்கு வந்து சேர்ந்தது. உடனே, ஏதோ பிரச்சனை ஆரம்பிக்கப் போகிறது என அங்குள்ளவர்களால் கணிக்க முடிந்தது. அதே போல முத்து அபாங்கின் எதிரியான பாஞ்சாங் சுரேஷும் இன்னும் சிலரும் வந்த காரை வழிமறித்தனர். பிறகு,  கண்ணாடியை உடைத்து பாஞ்சாங் சுரேஷைக் காருக்குள்ளேயே வைத்து ‘மம்டி சாப்’ முனுசாமி வெட்டினான். இரத்தம் சாலையில் தெறித்தது. பத்து நிமிடங்களாகியும் கூட உதவ நாதியில்லாமல் பாஞ்சாங் சுரேஷ் துடிக்கத் துடிக்கச் உயிர்விட்டான்.

பாஞ்சாங் சுரேஷ் இறந்த செய்தியைக் கேட்டதும் இரு கும்பலுக்குமிடையே கலவரம் அங்குமிங்குமாக மேலும் பரப்பரப்பாகத் தொடங்கியது. அந்த இரு கும்பலின் கலவரத்தில் இறந்துபோன பெரும்பாலான ஆண்கள் யாவரும் பெடோங்கில் நடுத்தரத்திற்கும் கீழான குடும்பத் தலைவர்கள் ஆவர். அதில் பாதி பேர் அப்பொழுதுதான் திருமணமானவர்கள். ஆகையால், அச்சம்பவத்திற்குப் பிறகு அங்குக் குழந்தை பிறப்பு விகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்துகொண்டே வந்தது. ஒரு சிறு பகுதியினர் அந்தக் கலவரத்துக்குப் பிறகு தங்களைக் காப்பாற்றிக்கொள்ள புலம் பெயர்ந்து வேறு பட்டணங்களுக்குச் சென்றுவிட்டனர். மீதி நிலைத்தவர்களில் மிகக் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட மக்கள் மட்டுமே பெடோங் அடுக்குமாடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அந்த இரு குண்டர் கும்பல் மட்டும் அதே பெடோங்கில் இன்னமும் உயிர்ப்புடன் இயங்கி வந்தன. தியாகு பாஞ்சாங் சுரேஷின் குழுவிற்குப் புதிய தலைவனாகவும் முத்து அபாங்கிற்குப் பதிலாக முனியாண்டி இன்னொரு குழுவிற்குத் தலைவனாகவும் பொறுப்பேற்றார்கள். அவர்களை வேறுப்படுத்திக்கொள்ள எண்களைத் தங்களின் குழுவிற்கு இட்டுக் கொண்டார்கள். அந்த எண்ணைக் குறிப்பிட்டு சொன்னால் பெடோங் புறநகர் பகுதியே நடுங்கும். வாழ்வாதாரத்திற்குப் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகவே அந்தக் கும்பல்களின் விவகாரங்களில் யாரும் தலையிடுவதே இல்லை. அவர்கள் எல்லா காலங்களிலும் உரையாடல் நடத்துவது அந்த ஆப்பே கடையில்தான். ‘Table Talk’ என அவர்கள் அதனை அழைத்துக் கொள்வார்கள்.

பெரும்பாலும் தாய்லாந்திலிருந்து ‘கட்டி’ வந்துவிட்டாலோ அல்லது யாரையாவது கொல்ல அல்லது காப்பாற்ற வேண்டுமென்றாலோ, ‘ஆள் மார்க்’ செய்ய வேண்டும் என்றாலும் எல்லோரும் ‘டேபள் டாக்குக்கு’ வருவது ஆப்பே கடைக்குத்தான். அங்கு வைத்துப் பல கொலைகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன.

1981ஆம் ஆண்டு ஜூன் 11 போத்தா சின்னுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டப் பிறகு சீன சிறுநகரங்களிலிருந்து பெரும்பாலான சீனர்களின் கோங்சி கெலாப் குண்டர் கும்பல்கள் உடைந்து சிதறிப் போயின. கொஞ்சம் கொஞ்சமாகப் பதுங்கி இருந்த இந்திய இளைஞர்கள் கம்பங்களையும் தோட்டங்களையும் கோலோட்சி செய்யத் துவங்கினர். அதில் முளைத்து வந்த ஏராளமானவர்களில் பாஞ்சாங் சுரேஷும் முத்து அபாங்கும் மிக முக்கியமானவர்கள். 1985ஆம் ஆண்டில் நடந்த பெடோங் கலவரத்திற்குப் பிறகு சிவனேசன், முனியாண்டி, தியாகு, மூர்த்தி போன்றவர்கள் பெடோங்கில் முக்கிய குற்றவாளிகளாக இருந்தனர்.

 

தொடரும்

  • ஆக்கம் கே.பாலமுருகன்

 

 

 

 

3 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *